/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமெரிக்காவிலிருந்து இவுங்க எழுதல... :மதுரை விவசாயிகளுக்காக 'குரல்' கொடுத்த கலெக்டர்
/
அமெரிக்காவிலிருந்து இவுங்க எழுதல... :மதுரை விவசாயிகளுக்காக 'குரல்' கொடுத்த கலெக்டர்
அமெரிக்காவிலிருந்து இவுங்க எழுதல... :மதுரை விவசாயிகளுக்காக 'குரல்' கொடுத்த கலெக்டர்
அமெரிக்காவிலிருந்து இவுங்க எழுதல... :மதுரை விவசாயிகளுக்காக 'குரல்' கொடுத்த கலெக்டர்
ADDED : ஜூலை 19, 2025 03:03 AM

மதுரை: மதுரையில் கலெக்டர் பிரவீன்குமார் பங்கேற்ற விவசாயிகளுக்கான முதல் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதிகாரிகளிடம் கோபமாக பேசிய விவசாயிகளிடம் 'கேள்வி மட்டும் கேளுங்கள்' என தட்டிக் கொடுத்து கூட்டத்தை கலெக்டர் சுமூகமாக நடத்தினார். தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைத்தொகுப்பு பழமரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
டி.ஆர்.ஓ., அன்பழகன், வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகரன் கலந்து கொண்டனர்.
தேனீ வளர்ப்பின் பயன்கள் குறித்து மதுரை விவசாய கல்லுாரி பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் பேசினார். மரங்களுக்கான 'கார்பன் கிரெடிட்' கேள்வி கேட்ட விவசாயிக்கு மாநகராட்சி பொறியாளர் மூலம் சென்னையில் கேட்டு பதில் அளிக்கவும் தினமும் குறைந்த மின்னழுத்தத்தால் பிரச்னை ஏற்படுவதாக தெரிவித்த விவசாயிக்கு மின்வாரிய அலுவலகம் மூலம் பதிலளிக்கவும் காட்டுப்பன்றி தொல்லைக்கு வனத்துறை தோட்டக்கலைத்துறை இணைந்து முகாம் நடத்தவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
தட்டிக்கொடுத்த கலெக்டர்
குன்னத்துார் கண்மாயை மீன்பிடி குத்தகைக்கு விட்டதால் தண்ணீர் திறந்து விடாமல் பயிர்கள் கருகுவதாக விவசாயி புகார் தெரிவித்ததும் 'பாசனத்திற்கு தான் முன்னுரிமை. அதற்கு பிரச்னை என்றால் நீர்வளத்துறை மீன்வளத்துறைக்கு வழங்கிய என்.ஓ.சி.,யை ரத்து செய்யலாம்' என்றும், மாவட்டத்தில் 2000 ஏக்கரில் 2000 விவசாயிகளுக்கு குறுவைத்தொகுப்பு மானியம் என்பதை வேளாண் உற்பத்தி ஆணையர் மூலம் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
கடந்த மாத கூட்டம் வரை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோபம், ஆவேசத்துடன் பேசியபோது அப்போதைய கலெக்டர் சங்கீதா கண்டும், காணாமல் இருந்தார். ஆனால் பிரவீன்குமார், மீன்வள துறை அதிகாரியிடம் கோபமாக பேசிய விவசாயிடம் 'கேள்வி மட்டும் கேளுங்கள். பதில் சொல்ல அனுமதிக்க வேண்டும். அமைதியாக பேசவேண்டும்' என தட்டி கொடுத்து உட்கார வைத்தார்.
கலெக்டர் பேசியதாவது: விவசாயிகள் பிரச்னை தொடர்பாக 5 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளேன். சாதனை படைத்த விவசாயிகள் தங்களது வெற்றியை சொல்லும் போது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும். அதேபோல விவசாயத்தில் புதுமையான நடைமுறைகளை பின்பற்றும் விவசாயிகளும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் நோக்கம். ஒரே கருத்தை மற்றவர் திரும்ப பேசக்கூடாது.
நீர்வளத்துறையில் கால்வாய், கண்மாய் ஆக்கிரமிப்பு பிரச்னை புகார்களுக்கு தீர்வு காணப்படும் என்று சொல்வது பதிலாகாது. தாசில்தார், பி.டி.ஓ.,க்கள் அடுத்தடுத்த அறையில் இருந்து கொண்டு துறை சார்ந்த மனுக்களுக்கு தபால் அனுப்பியுள்ளேன் என்பதும் சரியான நடைமுறையில்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டு யாரும் கடிதம் எழுதவில்லை. எளிய நடைமுறையை பின்பற்றி வாட்ஸ் ஆப் மூலம் விரைவாக செயல்பட பழகுங்கள். எந்தெந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்பதை குறித்து வைத்து போட்டோவுடன் அடுத்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மறுபடி இழுபறி
சென்ற மாத மனுக்கள் வாசிப்பு மதியம் 12:00 மணிக்கு முடிந்த நிலையில் தாலுகாவிற்கு இருவர் வீதம் பேச அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கம் போல 20 ஆண்டு, 30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைகளை விவசாயிகள் கையில் எடுத்தனர். பல ஆண்டு பிரச்னைகளுக்கு பத்து நிமிடத்தில் தீர்வு கேட்டு விவசாயிகள் நேரத்தை கடத்தினர். இதனால் காலை 10:00 மணிக்கு துவங்கிய கூட்டம் நிறைவடைய மதியம் 2:30 மணியாகி விட்டது. மாதந்தோறும் இதுபோன்று பல மனுக்கள் வாசிக்கப்பட்டு தீர்வு காணப்படாமல் கடந்து செல்லப்படுகிறது. நீண்டகால பிரச்னைகளை தீர்ப்பதற்கு என தனியாக கமிட்டி அமைத்து பிரச்னையை சரிசெய்ய கலெக்டர் முன்வரவேண்டும்.

