சுடுகாட்டில் குடியேறி போராட்டம் மயிலாடுதுறையில் பரபரப்பு
சுடுகாட்டில் குடியேறி போராட்டம் மயிலாடுதுறையில் பரபரப்பு
UPDATED : நவ 29, 2026 10:14 PM
ADDED : நவ 29, 2026 10:14 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நவீன அரிசி ஆலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், உமி எரிப்பதை கண்டித்து, கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இங்கு, நெல்லை அவியல் செய்ய உமி பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தனி நபர் ஒருவர், 2010ல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, கோர்ட் உத்தரவிட்டது.
ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, சித்தர்காடு கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதையடுத்து பொதுமக்கள் கோர்ட்டிற்கு சென்று, போராட்டத்திற்கு தடை செய்யக்கூடாது என்று உத்தரவை பெற்றனர்.
அதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஆலையை மூட வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்தும் சித்தர் காடு கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறி சமைத்து சாப்பிடும் போராட்டத்தை நேற்று துவக்கினர். 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
