மயிலாடுதுறையில் கடை முழுக்கு தீர்த்தவாரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறையில் கடை முழுக்கு தீர்த்தவாரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED : நவ 16, 2026 08:35 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் இன்று (நவ.,16) நடந்த கடை முழுக்கு தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசி 10 நாட்கள் திருவிழாவில், சிவன் கோவில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருள செய்யப்பட்டு துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த மாதம் 18ம் தேதி தீர்த்தவாரி துவங்கிய நிலையில், இன்று கடைமுழுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. காவிரி துலா கட்டத்தின் இரு கரைகளிலும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் ஆகிய சுவாமிகள் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதன்யேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர்.
திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் தெற்கு கரையிலும், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் வடக்கு கரையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் போர்வெல் நீரில் புனித நீராடினர். தொடர்ந்து 2 கரைகளிலும் சுவாமி அம்பாளுக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கூறுகையில், பிரசித்தி பெற்ற கடை முழுக்க தீர்த்தவாரிக்கு ஆண்டுதோறும் காவிரியில் பக்தர்கள் புனித நீராட தண்ணீர் கிடைப்பதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். காவிரியில் சாக்கடை கழிவு நீர் கலப்பதும், புனித நீராட தண்ணீர் இல்லாததும் மன வருத்தத்தை அளிக்கிறது என்றார்.
