/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
களைகட்டிய பேளுக்குறிச்சி இரவு நேர சந்தைவிடிய விடிய பொருட்களை வாங்கி சென்ற மக்கள்
/
களைகட்டிய பேளுக்குறிச்சி இரவு நேர சந்தைவிடிய விடிய பொருட்களை வாங்கி சென்ற மக்கள்
களைகட்டிய பேளுக்குறிச்சி இரவு நேர சந்தைவிடிய விடிய பொருட்களை வாங்கி சென்ற மக்கள்
களைகட்டிய பேளுக்குறிச்சி இரவு நேர சந்தைவிடிய விடிய பொருட்களை வாங்கி சென்ற மக்கள்
ADDED : மார் 30, 2025 01:44 AM
ராசிபுரம்:பேளுக்குறிச்சியில் நடந்த இரவு நேர சந்தைக்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை, குறைந்த விலையில் வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் களைகட்டியது.
கொல்லிமலை அடிவாரத்தை ஒட்டி, பேளுக்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. கொல்லிமலையின் மேற்கு பகுதியில் உள்ள கிராம மக்கள், அப்பகுதியில் விளையும் பழம், பட்டை, மிளகு உள்ளிட்ட வாசனை பொருட்களை, பேளுக்குறிச்சியில் விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
நாளடைவில் மிகப்பெரிய வணிகமாக மாறி, பேளுக்குறிச்சியில் இரவு நேர சந்தையாக மாறியது. இந்த சந்தையில் விற்கப்படும் சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு உள்ளிட்ட பொருட்களை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மாசி மாதம் இறுதியில் தொடங்கும் இந்த வாரச்சந்தை, சித்திரை மாதம் வரை நடக்கும். வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி, சனிக்கிழமை மதியம், 12:00 மணிவரை மட்டுமே சந்தை நடக்கும். வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய சந்தை கலையாமல், அதே கூட்டத்துடன் வியாபாரம் நடப்பது தான் இதன் விசேஷம்.
வெளி மாவட்ட மக்கள், டூரிஸ்ட் வாகனங்களில் வந்து சமையல் பொருட்களை வாங்கி சென்றனர். சீரகம், கடுகு, சோம்பு, வெந்தயம் ஆகியவை தலா, நான்கு படியும், மிளகு ஒரு படியும் சேர்ந்து, ஒரு செட் என, அழைக்கப்படுகிறது. இந்த செட், 1,000 ரூபாயிலிருந்து, 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வீட்டிற்கு தேவையான நவதானியங்கள், மளிகை பொருட்கள், உலக்கை, உரல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் இந்த சந்தையில் கிடைப்பதால், பெண்கள் அதிகம் விரும்பி வாங்கி சென்றனர்.