/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அக்னி மாரியம்மன் கோவிலில்தீமிதி விழா கோலாகலம்
/
அக்னி மாரியம்மன் கோவிலில்தீமிதி விழா கோலாகலம்
ADDED : ஏப் 03, 2025 01:35 AM
அக்னி மாரியம்மன் கோவிலில்தீமிதி விழா கோலாகலம்
பள்ளிப்பாளையம்:ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா, கடந்த இரண்டு வாரத்திற்கு முன், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும், அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், பூஜை நடந்து வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா, நேற்று நடந்தது. அதிகாலை முதலே ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். பலரும் கை குழந்தையுடன் தீ மிதித்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த தீமிதி நிகழ்ச்சியின்போது, ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார், தன் ஆறு வயது குழந்தையுடன் குண்டத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது, கால் தவறி குண்டத்தின் ஓரத்தில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டனர். இதனால், அதிர்ஷ்டவசமாக தந்தை, குழந்தை இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பினர்.

