ADDED : ஆக 09, 2026 04:58 AM
நாமக்கல்:''தமிழகத்தில்,
கள் மீதான தடையை அரசு உடனடியாக நீக்க வேண்டும். தவறினால் தடையை மீறி
போராட்டம் நடத்துவோம்,'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்
நல்லசாமி கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது:
தென்னை, பனை மரங்களில் இருந்து, கள் இறக்குவதும், அதனை விற்பனை
செய்வதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது. இந்திய
அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளின் அடிப்படையில்,
விவசாயிகள் கள் இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமை
பெற்றுள்ளனர். வெளிநாட்டு மதுபானங்களுக்கும், அரசே நடத்தும்
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் அனுமதி அளித்துள்ள நிலையில்,
விவசாயிகளின் வாழ்வாதாரமான கள்ளுக்கு மட்டும் தடை விதிப்பது
நியாயமற்றது. கள் மீதான தடையை அரசு நீக்காவிட்டால், தடையை மீறி கள்
இறக்கும் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்
கூறினார்.
விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்
பாலசுப்ரமணியன், சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
