/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடி வெள்ளியில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
/
ஆடி வெள்ளியில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
ADDED : ஆக 03, 2024 01:12 AM
நாமக்கல், ஆடி, 3ம் வெள்ளிக்கிழமையில், நாமக்கல் மாவட்ட கோவில்களில் குவிந்த பக்தர்கள், மெய் சிலிர்க்க சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம். இந்த மாதம் பல விசேஷங்கள் இருந்தாலும், ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய் ஆகிய இரண்டுமே மிக விசேஷமான நாட்கள். ஆடி மாதம், ஈசனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதம். சக்திக்குள் சிவன் ஐக்கியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஆடி, 3ம் வெள்ளிக்கிழமையான நேற்று, மோகனுார் மாரியம்மன் கோவிலில், மதியம், 12:00 மணிக்கு, அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம், 5,000 வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு, வளைகாப்பு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* பரமத்தியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேகம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* பள்ளிப்பாளையம் அடுத்த ஒன்பதாம்படி பகுதியில், காவிரி பாலம் அருகே பிரசத்தி பெற்ற அன்னை ஸ்ரீ புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அம்மனுக்கு வேப்பிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
* வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு, கூழ், துள்ளுமாவு, பொங்கல் உள்ளிட்டவற்றை பிரசாதமாக வழங்கப்பட்டது.
* குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இதேபோல், கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
* ராசிபுரத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு முழுதும் இந்த மாரியம்மன் கோவிலில் மட்டும் தான் கம்பமும், அம்மன் சுமங்கலியாகவும் காட்சி தருகிறார். இதனால், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். நேற்று, ஆடி வெள்ளியையொட்டி, காமாட்சி அம்மன் அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில், மகளிர் குழு சார்பில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.