/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் அமைத்துள்ள மொபைல் போன் டவர்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
/
கொல்லிமலையில் அமைத்துள்ள மொபைல் போன் டவர்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
கொல்லிமலையில் அமைத்துள்ள மொபைல் போன் டவர்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
கொல்லிமலையில் அமைத்துள்ள மொபைல் போன் டவர்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
ADDED : மே 20, 2024 02:11 AM
நாமக்கல்: 'கொல்லிமலையில் புதிதாக அமைத்துள்ள, 13 மொபைல் போன் டவர்களையும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ.,வின், மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், பி.எஸ்.என்.எல்., உயர் அதிகாரிகள், நாமக்கல் கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து, 1,330 மீ., உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு, 14 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இங்குள்ள மலை கிராமங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமாக, மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான மலை கிராமங்களில் தொலைதொடர்பு வசதி இல்லை.
இதனால், மலைவாழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொபைல் போன் டவர் மற்றும் இன்டர்நெட் சிக்னல் இல்லாததால், மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் படிக்க முடியாமலும், பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் பள்ளி கல்லுாரி சேர்க்கைக்கு விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாமலும், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பங்கள் அனுப்ப முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும், மொபைல் போன் சிக்னல் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், மலைவாழ் மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பாரத பிரதமரின் யு.எஸ்.ஓ., திட்டத்தின் கீழ், கொல்லிமலையில் உள்ள மேட்டு விளாரம், மேல் கலிங்கம்பட்டி, துவரப்பள்ளம்பட்டி, ஆளேரிப்பட்டி, செங்கரை, வடகாடு, சேப்பங்குளம்பட்டி, தேகவிப்பட்டி, ஊர்மலை கஸ்பா, குண்டணி கீரைக்காடு, நரியங்காடு, நரியங்கிணறு, நத்துப்பட்டி ஆகிய, 13 இடங்களில், மொபைல் போன் டவர்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல இடங்களில் மொபைல் போன் டவர்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளன. ஒரு சில இடங்களில் பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகின்றன. தற்போது, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. விரைவில், 'நீட்' தேர்வு முடிவும் வெளிவர உள்ளன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பவும், ஆன்லைன் மூலம் படிக்கவும் கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கும் மொபைல் போன், இன்டர்நெட் வசதி மிகவும் தேவையாக உள்ளது.
அவற்றை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசு அதிகாரிகள், பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, கொல்லிமலையில் அமைக்கப்பட்டுள்ள, 13 மொபைல்போன் டவர்களை உடனடியாக செயல்படுத்தி, தொலைத்தொடர்பு சிக்னல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

