ADDED : செப் 07, 2024 07:53 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, 1,260 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் குற்றப்புலானய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையில் போலீசார், ராசிபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்னாம்பள்ளி சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, 'மாருதி' வேனை சோதனை செய்து பார்த்தபோது, 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி, ரேஷன் அரிசியை கடத்தி வந்த, தொட்டியப்பட்டியை சேர்ந்த மணி மகன் முத்துவிடம், 30, விசாரணை நடத்தினர். அதில், வையப்பமலை, மின்னாம்பள்ளி, எலச்சிபாளையம் ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதிகளில் தட்டுவடை, அதிரசம், முறுக்கு செய்யும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து, 1,260 கிலோ ரேஷன் அரிசியையும், ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்திய மாருதி வேனை பறிமுதல் செய்ததுடன், முத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.