/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாநகராட்சியில் 249 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
நாமக்கல் மாநகராட்சியில் 249 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நாமக்கல் மாநகராட்சியில் 249 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நாமக்கல் மாநகராட்சியில் 249 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : அக் 17, 2025 02:14 AM
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் கலாநிதி தலைமையில் நடந்தது. துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கரூரில், த.வெ.க., பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்தில், 41 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:
கவுன்சிலர் சந்திரசேகர்: சேந்தமங்கலம் சாலையில் உள்ள மயானத்தில், இறந்தவர்களின் சடலங்களை புதைக்க, 10 ஆயிரம், 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கின்றனர். அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமிஷனர்: இது குறித்து வந்த புகாரையடுத்து, 4,000 ரூபாய் மட்டுமே பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
கவுன்சிலர் ஈஸ்வரன்: மழைகாலம் துவங்கியுள்ளது. கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் மழை நீரோடு சாக்கடை கழிவுநீரும் தேங்குகிறது. அதை தடுக்க வேண்டும்.
கமிஷனர்: ஏரி அருகில் உள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம், குழாய் பதிக்க இடம் ஒதுக்கி தர கோரி வருவாய்த்துறையிடம் கேட்கப்படும்.
கவுன்சிலர் நந்தகுமார்: அரசு மருத்துவக்கல்லுாரி பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் நல்லிபாளையம், அய்யம்பாளையம், கருப்பட்டிபாளையம் வரை உள்ள வெள்ளவாரி உள்ளிட்ட நீர் வழிப்பாதையில் புதர் மண்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கமிஷனர்: சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையடுத்து கமிஷனர் சிவக்குமார் பேசுகையில்,'' மாநகராட்சிக்கு உட்பட்ட, 39 வார்டுகளில் அருந்ததியர் தெரு, நரிக்குறவர் காலனி என்ற வகையில் ஜாதி பெயர்கள் உள்ளன. அந்த பெயர்களை மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளதால், அதற்கான சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த பெயரே இருக்கலாம் என மக்கள் தெரிவித்தால், அதற்கான ஒப்புதல் கருத்துருக்களையும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பணிகளை கவுன்சிலர்கள், அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து அவசர கூட்டத்தில், 78 தீர்மானங்கள், சாதாரண கூட்டத்தில், 171 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி மற்றும் பிரிவு சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.