/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உற்பத்தி குறைவால் செங்கல் விலை உயர்வு
/
உற்பத்தி குறைவால் செங்கல் விலை உயர்வு
ADDED : மே 25, 2025 12:44 AM
வெண்ணந்துார், வண்டல், செம்மண் தட்டுப்பாடு மற்றும் கோடை மழையால், வெண்ணந்துார் பகுதியில் செங்கல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு செங்கல் விலை, ஒரு ரூபாய், 30 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் பகுதியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கல் தயாரிப்பு பணி நடந்துவருகிறது. செங்கல் உற்பத்திக்கு தேவையான வண்டல், செம்மண், நீர் ஆகியவை போதுமான அளவு கிடைப்பதால், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில் செங்கல் உற்பத்தி அதிகளவு நடக்கிறது. மாதந்தோறும் லட்சக்கணக்கில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள், நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, சேலம், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது நிலவும் பருவநிலை மாற்றம், வண்டல், செம்மண் பற்றாக்குறை மற்றும் கோடை மழையால் செங்கல்
உற்பத்திக்கு சாதகமான சூழல் இல்லை. இதனால், செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வெண்ணந்துார்
பகுதியில் இத்தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, செங்கல் சூளை
உரிமையாளர்கள் கூறியதாவது:
சில நாட்களாக வண்டல் மண், செம்மண்ணுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து பெய்த கோடை மழை, குளிர்ச்சியான பருவ நிலையால் செங்கல் உற்பத்தி இல்லை. தயாரித்து இருப்பு வைத்திருந்த செங்கற்கள் முழுவதும் விற்று தீர்ந்தது. இதனால், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் இருப்பு இல்லை.
தட்டுப்பாடு காரணமாக, ஒரு வாரத்திற்கு முன், 6.20 ரூபாய்க்கு விற்ற ஒரு செங்கல், 1.30 காசு அதிகரித்து, தற்போது, 7.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, வண்டல், செம்மண் அள்ள, மாவட்ட நிர்வாகம் முறையாக, 'பர்மிட்' வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.