/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பவித்திரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், மொபைல் பரிசு
/
பவித்திரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், மொபைல் பரிசு
பவித்திரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், மொபைல் பரிசு
பவித்திரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், மொபைல் பரிசு
ADDED : மே 07, 2025 02:06 AM
சேந்தமங்கலம்:எருமப்பட்டி, பவித்திரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 502 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. துள்ளி எழுந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, பீரோ, கட்டில், மொபைல் போன் பரிசாக வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியன் பவித்திரத்தில், நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். முதலில் கோவில் காளையை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள், ஒரு குழுவிற்கு, 50 பேர் வீதம் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வாடிவாசலில் இருந்து சிட்டாக பறந்து வந்த காளைகளின் திமிலை, மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்க முயன்றனர். ஆனால், ஆக்ரோஷமான காளைகள் திரும்பி நின்று வீரர்களை துவம்சம் செய்தது. ஒரு சில காளைகள், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் விழாக்குழு சார்பில் பீரோ, கட்டில், மொபைல் போன் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், கம்பீர காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, 10,000 ரூபாய் முதல், 50,000 ரூபாய் வரை பரிசு தொகை வழங்கப்பட்டது. மொத்தம், 502 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில், 23 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர், '108' அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு சில காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய வீரர்களை வாடிவாசலில் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.