/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை: '1962' அழைக்கலாம்
/
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை: '1962' அழைக்கலாம்
ADDED : நவ 23, 2024 01:42 AM
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை: '1962' அழைக்கலாம்
ராசிபுரம், நவ. 23-
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சையளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண், '1962'க்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், எஸ்.உடுப்பம் ஊராட்சி, செங்கோடம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ முகாம் நடப்பதை கலெக்டர் உமா, நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவர் விவசாயிகளிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஒரு கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 5 கால்நடை மருத்துவமனைகள், 105 கால்நடை மருந்தகங்கள், 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மூலம் பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை குறிப்பிடப்பட்ட வழித்தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவைகளும், மாலை, 2:00 மணி முதல், 5:00 மணி வரை, '1962' என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால், அவசர அழைப்புகளை ஏற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்போர் இச்சேவைகள பயன்படுத்தி, கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் உமா கூறினார்.