/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் தொடர் மழை ஏரி, குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
மாவட்டத்தில் தொடர் மழை ஏரி, குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் தொடர் மழை ஏரி, குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் தொடர் மழை ஏரி, குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 15, 2024 06:57 AM
நாமக்கல்: தமிழகத்தில், உள் மாவட்டங்களில் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அதனால், ஏரி, குளம் நிரம்பி, அதன் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது, விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, கோடை காலத்தை போல் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேர வெப்பம், 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. இதனால், பொதுமக்கள், முதியோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். வழக்கமாக ஆடி மாதத்தில் துவங்க வேண்டிய பருவமழை தாமதமாகி வந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு அச்சாரமாக, தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில், உள் மாவட்டங்களில் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, மாநிலம் முழுவதும், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 5 முதல் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், ஏரி, குளம், குட்டைகளிலும் நீர் நிரம்பி வருகிறது. இது, விவசாயிகள், பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு: குமாரபாளையம், 1, மங்களபுரம், 12.60, மோகனுார், 15, நாமக்கல், 8.50, ப.வேலுார், 11, புதுச்சத்திரம், 3.20, ராசிபுரம், 4, சேந்தமங்கலம், 1, திருச்செங்கோடு, 7, கலெக்டர் அலுவலகம், 2.20, கொல்லிமலை, 9 என, மொத்தம், 74.50 மி.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கிடையில், நேற்று நாமக்கல் நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 3:30 மணிக்கு லேசாக மழை பெய்ய துவங்கி, கனமழையாக மாறியது. அரை மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில், தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். கடந்த, 13ல், 177.10 என, இரண்டு நாட்களில், 251.60 மி.மீ., மழை பெய்துள்ளது. இம்மாதத்தில் இதுவரை, 1,641.35 மி.மீ., மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இயல்பு வாழ்க்கை பாதிப்புராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்பட சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு விடிய விடிய துாறல் மழை பெய்து வந்தது. மேலும், காலை பள்ளி நேரத்திலும் துாறல் இருந்ததால் மாணவர்கள் குடை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். பகலிலும் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராசிபுரத்தில் மதியம், 2:30 மணியில், ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. வேளாண் பணிகள், கட்டுமான பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் வீட்டில் முடங்கினர்.
அங்கன்வாடி முன்...ப.வேலுார், தெற்கு நல்லியாம்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக, அங்கன்வாடி முன் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அங்கன்வாடிக்கு வந்த குழந்தைகள், பெற்றோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். தண்ணீர் தேங்கி நிற்பதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
உழவு பணி தீவிரம்வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டாரத்தில், சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதையடுத்து, டிராக்டரை கொண்டு வயலில் உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து, உரமிட்டு நிலத்தை சமன்படுத்தும் பணி முடிந்து நாற்று நடும் பணி நடக்க உள்ளது.
சர்வீஸ் சாலையில்...நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைந்துள்ளது. அதில், வள்ளிபுரம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருந்து நல்லிபாளையம் பைபாஸ் சர்வீஸ் சாலையின் நடுவே உள்ள ஆண்டிப்பட்டி ரோடு அருகே தாழ்வாக உள்ள சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்து புகார்படி, நெடுஞ்சாலை பணியாளர்கள் மூலம் மோட்டார் பொருத்திய டேங்கர் லாரி மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.
வெளியேறிய உபரி நீர்பள்ளிப்பாளையத்தில் எளையாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், சில்லாங்காடு, எலந்தகுட்டை, சமயசங்கிலி உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, ஓடை, நீர் தேக்கம், தடுப்பணைகள் உள்ளன. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரி, ஓடை, நீர்த்தேக்கம், தடுப்பணை உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் முழுமையாக நிரம்பின. தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிரம்பிய ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.