/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மன உளைச்சலால் அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை
/
மன உளைச்சலால் அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை
ADDED : ஆக 15, 2025 02:49 AM
மேட்டூர், கொளத்துார், கோட்டையூர் அடுத்த அலையாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 46. இவரது மனைவி கலா, 36. இவர்களது மகன்கள் ஸ்ரீதர், 17, கவுதம், 13. பழனிசாமி, அரசு போக்குவரத்து கழகம் மேட்டூர் பணிமனையில், 16 ஆண்டாக கண்டக்டராக பணிபுரிந்தார்.
அவர், மேட்டூர் - கோட்டையூர் டவுன் பஸ்சில் பணியாற்றி வந்த நிலையில், சில வாரங்களாக சேலம் -மாதேஸ்வரன் மலை பஸ்சுக்கு மாற்றப்பட்டார். அதேநேரம் சமீபகாலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டுள்ளார்.
கடந்த, 12ல் மேட்டூரில் இருந்து சேலம் சென்ற பஸ்சில், பணியில் இருந்தபோது, மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு ஊழியரிடம் பணியை ஒப்படைத்து விட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, பழனிசாமியை தொடர்பு கொண்ட பணிமனை அதிகாரி, 'பணிக்கு வராவிடில் இடமாற்றம் செய்து விடுவோம்' என பேசியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பழனிசாமி, அதிகாலையில் வீட்டு மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, 'கணவர் சாவுக்கு காரணமாக இருந்தவர்களிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலா புகார்படி கொளத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.