/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவியை கொலை செய்து நாடகம்? ஹிந்து முன்னணி மா.செ.,விடம் விசாரணை
/
மனைவியை கொலை செய்து நாடகம்? ஹிந்து முன்னணி மா.செ.,விடம் விசாரணை
மனைவியை கொலை செய்து நாடகம்? ஹிந்து முன்னணி மா.செ.,விடம் விசாரணை
மனைவியை கொலை செய்து நாடகம்? ஹிந்து முன்னணி மா.செ.,விடம் விசாரணை
ADDED : மே 12, 2025 11:58 PM

நாமக்கல் : நாமக்கல்லில் மனைவி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரான ஹிந்து முன்னணி மாவட்ட செயலரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த பொத்தனுாரை சேர்ந்தவர் ஜெகதீஷன், 38; ஹிந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலர். இவரது மனைவி கீதா, 36. தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, ஜெகதீசனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, கீதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அருகில் ரத்த காயத்துடன் கிடந்த ஜெகதீசன், மர்ம நபர்கள் சிலர் வந்து கீதாவையும், தன்னையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அப்பகுதி, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் நடமாட்டம் எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனால் ஜெகதீசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
ஜெகதீசனுக்கும், கீதாவுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. தையல் தொழிலில் ஈடுபட்ட கீதா, ஓராண்டாக அப்பகுதியில் உள்ள கார்மென்ட்ஸ் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அதனால், அவரது நடத்தையில் ஜெகதீசனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன் கீதா, தன் இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். சமாதானம் செய்து ஜெகதீசன் மீண்டும் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் ஜெகதீசன், தன் இரண்டு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள அக்கா வீட்டில் விட்டுள்ளார். நேற்று முன்தினம், வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஜெகதீசனுக்கும், மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
தன் சகோதரனிடம், கீதா மொபைல் போனில் இதை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை, தாய் தனலட்சுமிக்கு, மகள் கீதா இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, மகள் இறப்புக்கு ஜெகதீசன் தான் காரணம் என, ப.வேலுார் போலீசில் புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து, சிகிச்சையில் இருந்த ஜெகதீசனை, பரமத்தி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'கணவன், மனைவி தகராறில், ஜெகதீசனே மனைவியை கொலை செய்து, தன்னையும் கொலை செய்ய முயற்சித்ததாக நாடகம் ஆடுகிறார். இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.