ADDED : மே 20, 2025 07:28 AM
மின்வாரிய ஊழியர் பலி
ராசிபுரம்: ராசிபுரம், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ், 56; இவர், பரமத்தி வேலுார் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, நாமக்கல்லில் இருந்து ராசிபுரத்திற்கு தன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அணைப்பாளையம் பாலத்தை விட்டு இறங்கும்போது, பின்னால் வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. பலத்த காயமடைந்த சின்ராஜை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சின்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இலவச கண் சிகிச்சை முகாம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சில்லாங்காடு பகுதியில் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு, குமாரபாளையம் இந்திய ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில், டிரைவர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம், வட்டார போக்குவரத்து அலுவலர் மாதவன் தலைமையில், நேற்று நடந்தது. சங்க தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இந்த கண் சிகிச்சை முகாமில், 200 டிரைவர்கள், 101 பள்ளி வாகன டிரைவர்கள், 99 பொதுமக்கள் பயனடைந்தனர். இதில், 26 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 28 பேருக்கு கண் புரை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. ஈரோடு வாசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் கண் பரிசோதனை செய்தனர்.
மரத்தில் இருந்து விழுந்தவர் சாவு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த களியனுார் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி 45; விவசாயி. இவரது தோட்டத்தில் பனை மரம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம், 6:00 மணிக்கு பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது தவறி விழுந்து பலத்த காயமடைந்த துரைசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வெள்ள சேதம்: அதிகாரிகள் ஆய்வு
எருமப்பட்டி: கொல்லிமலையில் பெய்த கனமழையால், அடிவாரத்தில் உள்ள தோட்டமுடையாம்பட்டியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், கடந்த, 10ல் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி, வாழை, பாக்கு மரங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பயிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நேற்று உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் ஜவகர், வி.ஏ.ஓ., மோகனாதேவி உள்ளிட்ட அதிகாரிகள், வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்தனர். அவர்கள், 'இழப்பீடு வழங்க அரசுக்கு அனுப்பப்படும்' என தெரிவித்தனர்.