/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.௨ லட்சம் இழப்பீடு வழங்க கார் நிறுவனத்துக்கு உத்தரவு
/
ரூ.௨ லட்சம் இழப்பீடு வழங்க கார் நிறுவனத்துக்கு உத்தரவு
ரூ.௨ லட்சம் இழப்பீடு வழங்க கார் நிறுவனத்துக்கு உத்தரவு
ரூ.௨ லட்சம் இழப்பீடு வழங்க கார் நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : மே 08, 2024 04:46 AM
நாமக்கல் : கோவை, வடவள்ளியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. கோவையில், 2022 ஜூன் மாதம், மாருதி சுசூகி கார் வினியோகஸ்தரிடம், 6.98 லட்சம் ரூபாய் செலுத்தி, கார் வாங்க முன்பதிவு செய்தார். ஓரிரு நாளில் டெலிவரி தருவதாக கூறிய வினியோகஸ்தர், நான்கு மாதங்கள் கழித்தே வழங்கினார்.
இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு கேட்டு, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், மாருதி சுசூகி கார் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆதி கார் விற்பனை நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்தார். விரைவான விசாரணைக்காக இந்த வழக்கு கடந்த பிப்., மாதம் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதில், மாநில போக்குவரத்து அமைப்பின், 'டிசைன்' அங்கீகாரம் கிடைக்காததால், காரை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக, கார் வினியோகஸ்தர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேசமயம் கார்களை உற்பத்தி செய்து வினியோகஸ்தர்களுக்கு வழங்கி விடுகிறோம். வினியோகஸ்தர்தான் விற்பனை தொடர்பான பிரச்னைகளுக்கு பொறுப்பானவர் என்று, கார் உற்பத்தி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா நேற்று தீர்ப்பளித்தனர்.மாநில போக்குவரத்து அமைப்பின் அங்கீகாரம் பெறாமல், காரை விற்பனை செய்ய வினியோகஸ்தருக்கு முன்பதிவு செய்யும் அதிகாரத்தை கார் உற்பத்தியாளர் வழங்கியதும், அங்கீகாரம் இல்லாத காருக்கு முழு தொகையை பெற்றும், நான்கு மாத தாமதம் செய்து வழங்கியதும் வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு.
இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, இழப்பீடாக கார் உற்பத்தி நிறுவனம், காரின் வினியோகஸ்தர் ஆகியோர், தலா இரண்டு லட்சம் வீதம், நான்கு வாரத்துக்குள் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட கார் உற்பத்தி நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு காருக்கும், 'டிசைன்' அங்கீகாரத்தை மாநில போக்குவரத்து அமைப்பில் பெறாமல், முன்பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

