/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
/
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
ADDED : டிச 11, 2025 05:35 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்., - தி.மு.க., தலைவர் மீது அக்கட்சி கவுன்சிலர்களே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி யடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,சில், 18 வார்டுகள் உள்ளன. தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமியும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர். லட்சுமிக்கும், அக்கட்சி கவுன்சிலர்களுக்கும், ஏழாம் பொருத்தமாக உள்ளதால், டவுன் பஞ்.,சில் பணிகள் அனைத்தும் முடங்கின.
இதனால், தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, ஜூலை, 15ல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், கூட்டம் நடத்தவில்லை.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தி, அதன் அறிக்கையை, நவ., 17க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தர விட்டது.
நவ., 14ல் தலைவர் லட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, 15 கவுன்சிலர்கள், ஒரு பா.ம.க., கவுன்சிலர் என, 16 பேர் பங்கேற்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர் பங்கேற்கவில்லை.
தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் ஓரிடத்தில் இருக்க, அதில் ஒரு கவுன்சிலரை மட்டும், தலைவர் லட்சுமி தன்வசம் இழுத்தார்.
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக, 14 ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகின. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக, 15 ஓட்டுகள் தேவைப்படும் நிலையில், 14 ஓட்டுகள் மட்டுமே பதிவானதால், லட்சுமியை பதவியிலிருந்து நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, வாக்கெடுப்பு விபரங்களை, ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம், செப்., 17ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
விசாரித்த உயர் நீதிமன்றம், 'முடிவுகளை அறிவிக்க செயல் அலுவலருக்கு உரிமை உண்டு. இதர மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என, உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று, 18 கவுன்சிலர்களுக்கும், செயல் அலுவலர் சண்முகம் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ப.வேலுார் டவுன் பஞ்., தலைவராக லட்சுமியே நீடிப்பார் என, தெரிவிக்கப்பட்டது.

