தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு: போராட்ட குழுவினர் மனு
தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு: போராட்ட குழுவினர் மனு
ADDED : நவ 14, 2026 06:10 AM

நாமக்கல்:திருச்செங்கோடு
அருகே செயல்படும் தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து,
நாமக்கல் மாவட்ட சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு போராட்ட குழுவினர்,
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க பேரவை ஒருங்கிணைப்பாளர் முகிலன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்செங்கோடு
தாலுகாவிற்குட்பட்ட அக்ரஹாரம் கிராமத்தில், தனியார் கல்குவாரி
செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு, கடந்த மார்ச் மாதம் அனுமதி
வழங்கப்பட்டது. இதில், பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக கூறி,
அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குவாரியை சுற்றி, 300 மீட்டர் தொலைவுக்குள் வீடுகள், ஊர் நத்தம்
பகுதிகள் மற்றும் கொட்டாம்பட்டி, அக்ரஹாரம், புதுார் ஆகிய, மூன்று
கிராமங்கள் அமைந்துள்ளன.
மேலும், 50 மீட்டர் தொலைவில்
தார்ச்சாலையும், 500 மீட்டர் துாரத்தில் ஆழ்துளை குழாய் கிணறும்
இருப்பது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கை வெறும் காகிதமாக மட்டும் இருந்துவிடக் கூடாது.
அதனடிப்படையில்
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக பொதுமக்களை திரட்டி
போராட்டம் நடத்தப்படும். அதேபோல், அப்பகுதியில் கோழிப்பண்ணை மற்றும்
அதன் கழிவுகளால் ஏற்படும் ஈ தொல்லையால், சுற்றுச்சூழல்
பாதிக்கப்படுகிறது.
இறந்த கோழிகளை முறையற்ற வகையில்
கொட்டுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. உரிய ஆதாரங்களை திரட்டி
அதிகாரிகளிடம் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
கல்குவாரி விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், பொதுமக்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
