ஆமை வேகத்தில் சாலைப்பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
ஆமை வேகத்தில் சாலைப்பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 16, 2026 04:20 AM

வெண்ணந்துார்:வெண்ணந்துார்,
ஆர்.புதுப்பாளையம் பஞ்., 9-வது வார்டு மாரியம்மன் கோவில் தெரு,
அப்பகுதியின் முக்கிய சாலையாக உள்ளது. இந்நிலையில், சாலையின்
இருபுறமும், 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணி, ஒரு மாதத்திற்கு முன்
தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து
வருகிறது.
இதனால், சாலையோரம் தோண்டப்பட்ட பகுதிகள் நீண்ட
நாட்களாக அப்படியே இருப்பதால் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,
முதியவர்கள், டூவீலர்களில் பெரும் சிரமத்துடன் சாலையை கடந்து
செல்கின்றனர். மேலும், சாலையின் குறுகலான பகுதிகளில் வாகனங்கள்
ஒன்றையொன்று கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல்
ஏற்படுவதுடன், அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து
வருகிறது.
எனவே, பெரிய அளவில் விபத்து நடக்கும் முன், 'பேவர்
பிளாக்' கற்கள் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி
மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
