/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளிக்கு மறுநாள் அனைத்து பள்ளிக்கும் ஈடு செய்யும் விடுமுறை அளிக்க கோரிக்கை
/
தீபாவளிக்கு மறுநாள் அனைத்து பள்ளிக்கும் ஈடு செய்யும் விடுமுறை அளிக்க கோரிக்கை
தீபாவளிக்கு மறுநாள் அனைத்து பள்ளிக்கும் ஈடு செய்யும் விடுமுறை அளிக்க கோரிக்கை
தீபாவளிக்கு மறுநாள் அனைத்து பள்ளிக்கும் ஈடு செய்யும் விடுமுறை அளிக்க கோரிக்கை
ADDED : அக் 16, 2025 01:25 AM
நாமக்கல், 'வரும் தீபாவளிக்கு மறுநாள், அக்., 21ல், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், ஈடு செய்யும் விடுமுறை அளிக்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகை வரும், 20ல், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை மாலையே பள்ளிகளில் இருந்தும், விடுதிகளில் தங்கி படித்து வரும் வெளியூர் மாணவ, மாணவியர் மற்றும் வெளியூரில் தங்கி பணியாற்றி வரும் ஆசிரியர்களும், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்வர். தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை, பகலை விட இரவு நேரத்தில் தான் வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் வண்ண, வண்ண பட்டாசு வகைகளை வெடித்தும், அதை கண்டுகளித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய நேரம்.
இதனால், தீபாவளி அன்று இரவு பெரும்பாலான மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை அவசரம், அவசரமாக கொண்டாடிவிட்டு, திரும்பவும் தாங்கள் படிக்கும் அல்லது பணிபுரியும் பள்ளிகள் சார்ந்த ஊருக்கு இரவோடு இரவாக பயணப்பட்டு செல்வதில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
அதனால், தீபாவளிக்கு மறுநாள் அக்., 21ல், பள்ளிகளுக்கு விடுமுறையாக இருந்தால், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என அனைவரும், போக்குவரத்து நெரிசலின்றி பயணம் செய்து, தங்கள் பள்ளி சார்ந்த வசிப்பிடங்களுக்கு வந்து சேர்வர். அவற்றை கருத்தில் கொண்டு, வரும், 21ல், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஈடு செய்யும் விடுமுறை வழங்க வேண்டும். அதற்கு பதில் வேறொரு நாளை ஈடு செய்யும் பணிநாளாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.