ADDED : மே 23, 2025 02:56 AM

நாமக்கல்:தமிழகம் முழுதும் இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மணல் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி, நாமக்கல்லில் நேற்று கூறியதாவது:
தமிழகம் முழுதும் அரசு மணல் குவாரிகளை திறந்து, பொதுமக்களுக்கு ஆன்லைன் முறையில் மணல் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,
மே 23 முதல் காலவரையற்ற மணல் லாரி ஸ்டிரைக் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.
கடந்த, 20ம் தேதி தமிழக கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி, கிரஷர் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகளை அழைத்து, சென்னையில் பேச்சு நடத்தினார்.
அப்போது, லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக பாரம் ஏற்றுவது தடுக்கப்படும். 'எம் - சாண்ட், பி -சாண்ட்' விலையை ஏற்றியது தொடர்பாக, கிரஷர் உரிமையாளர்கள் வாயிலாக விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உட்பட, பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
ஒரு வாரத்தில் தமிழகத்தில், அரசு மணல் குவாரிகளை திறந்து, மணல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.
இதனால் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.