/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதல்வர் படத்தை எட்டி உதைத்த தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி
/
முதல்வர் படத்தை எட்டி உதைத்த தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி
முதல்வர் படத்தை எட்டி உதைத்த தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி
முதல்வர் படத்தை எட்டி உதைத்த தி.மு.க., நிர்வாகியால் அதிர்ச்சி
UPDATED : ஏப் 24, 2025 05:52 AM
ADDED : ஏப் 24, 2025 02:17 AM

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி தி.மு.க., வடக்கு, தெற்கு என பிரித்து, இரண்டு நகர செயலர்களின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில், வடக்கு நகரத்திற்கு, குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் நகர செயலராக உள்ளார்.
இதில், வடக்கில் உள்ள, 14வது வார்டில், கடந்த, 19ல் கிளை செயலர் விஸ்வநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், மற்றொரு தரப்பினர் கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கேட்ட, விஸ்வநாதனை, எதிர்தரப்பினர் தாக்கினர். அவர், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த தகராறின் போது, விஜயகண்ணன் தரப்பை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், விஸ்வநாதன் அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து, உடைக்கும் வீடியோ காட்சி, தற்போது பரவி வருகிறது.
மேலும், விஸ்வநாதன், தி.மு.க., நிர்வாகி ஒருவரிடம் மொபைல் போனில் மனக்குமுறலுடன் பேசும் ஆடியோவும் பகிரப்பட்டு வருகிறது. அதில், 'கட்சியை பல ஆண்டுகளாக வளர்த்து வந்தேன். அ.தி.மு.க., கோட்டையாக இருந்த இந்த வார்டை, தி.மு.க., கோட்டையாக மாற்றினேன். எனக்கு தெரியாமல் கிளை கூட்டம் நடத்துகின்றனர். நேரில் சென்று கேட்டால் அடிக்கின்றனர்.
'என் அலுவலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை காலால் எட்டி உதைக்கின்றனர். வரும் காலத்தில் தி.மு.க.,வின் நிலை, குமாரபாளையத்தில் என்னவாகும் என தெரியவில்லை. அராஜகம் அதிகமாகி விட்டது. கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பேசியுள்ளார்.
இந்த வீடியோ, ஆடியோவால் குமாரபாளையம் தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் புகாரின்படி, குமாரபாளையம் போலீசார், நேற்று மாலை, முதல்வர் படத்தை அவமதித்ததாக, விஸ்வநாதன், 59, பிரபாகரன், 33, நாகராஜ், 28, அலெக்ஸாண்டர், 30, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.