ADDED : அக் 19, 2025 04:14 AM
துாய்மை பணியாளர்களுக்கு
சீருடை, இனிப்பு வழங்கல்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு, நகராட்சி தலைவர் சீருடை இனிப்பு வழங்கினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளிப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், நீரேற்று நிலைய பணியாளர்கள், பொது சுகாதார பணியாளர்களுக்கு, நகராட்சி தலைவர் செல்வராஜ் சீருடை, இனிப்பு வகைகளை வழங்கினார்.
நகராட்சி கமிஷனர் தயாளன், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
வள்ளலார் அன்னதான குழுமுதியோருக்கு உடை வழங்கல்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் அன்னதான கூடத்தில், வள்ளலார் அன்னதான குழு சார்பில் தினந்தோறும், 60 முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. முக்கிய தினங்களில் நன்கொடையாளர்கள் இனிப்பு, காரம் ஆகியவற்றையும் வழங்குகின்றனர்.
இந்நிலையில் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த மனோஜ்குமார் குடும்பத்தினர் அனைத்து முதியவர்களுக்கு தீபாவளியை ஒட்டி சேலை வழங்கினர். நேற்று வழங்கப்பட்ட உணவுடன் சேலையும் வழங்கப்பட்டதால் முதியவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர்.
மொஞ்சனுாரில்வயல் தின விழா
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரம், மொஞ்சனுார் கிராமத்தில் நடந்த மக்காச்சோளம் பயிரிட்ட கைலாசம் என்ற விவசாயியின் வயலில் வயல் தின விழா நடந்தது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ், வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் குறித்தும், மக்காச்சோளம் உயர்விளைச்சல் பெற கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், பூச்சி மேலாண்மை குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் மொஞ்சனுார் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அத்திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
மக்காச்சோளம் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில் நுட்பங்களும் எடுத்துரைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் முனைவர் ஜெகதாம்பாள் கலந்துகொண்டு சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, உயர் விளைச்சல் ரகங்கள் பயன்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் மோகன், அட்மா திட்ட அலுவலர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.