ADDED : நவ 20, 2025 01:53 AM
திருச்செங்கோடு,தமிழக அரசின் கல்லுாரி, கல்வித்துறை சார்பில், மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி, திருச்செங்கோடு தனியார் கல்லுாரியில் நடந்தது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். கவிஞர் நெல்லை ஜெயந்தா, 'மனதை பார்த்துக்கொள்! நல்லபடி' என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர், ''வாழ்க்கை என்பது, ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என, புத்தர் கூறினார். நரேந்திரனாக இருந்தவரின் வாழ்க்கை, கல்லுாரியில் பேச்சாளரின் ஒரு நொடி பேச்சால் விவேகானந்தராக மாற்றம் பெற்றது. ஒரு நொடியில், காதில் விழுந்த செய்தி தான் அவரை துறவியாக மாற்றியது. ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து பார்க்க, மனதை பக்குவப்படுத்திக்கொண்டு வாழ வேண்டும். நம் மனதை அலைக்கழிக்க ஆயிரம் விஷயங்கள் வரும் ஆனால் அவற்றில் கவனம் செலுத்தாமல், கல்வியும் ஒழுக்கமும் இரண்டு கண்களாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,'' என்றார்.

