ADDED : செப் 18, 2025 02:05 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த லட்சுமிபாளையம் பகுதியில் ஏராளமானோர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெறிநாய் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெறிநாய் கடித்து இரண்டு ஆடுகள் பலியானதால், அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'லட்சுமிபாளையம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, மேய்ச்சலில் இருந்த இரண்டு ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறின. இதில் ஒரு ஆடு இறந்துவிட்டது. மற்றொரு ஆடு காயமடைந்தது. கடந்த, 6ல் இதேபோல் வெறிநாய் கடித்து ஒரு ஆடு இறந்தது. இதற்கு முக்கிய காரணம், இறைச்சி கழிவுகளை லட்சுமிபாளையம் அருகே உள்ள வத்தங்காடு பகுதியில் கொட்டுகின்றனர். அதை சாப்பிட வரும் நாய்கள், ஆடுகளை கடித்து குதறுகின்றன. இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடை செய்ய வேண்டும்' என்றனர்.