/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு சட்ட கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம்; எஸ்.பி., --- ஆர்.டி.ஓ., ஆய்வு
/
அரசு சட்ட கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம்; எஸ்.பி., --- ஆர்.டி.ஓ., ஆய்வு
அரசு சட்ட கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம்; எஸ்.பி., --- ஆர்.டி.ஓ., ஆய்வு
அரசு சட்ட கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம்; எஸ்.பி., --- ஆர்.டி.ஓ., ஆய்வு
ADDED : டிச 09, 2025 05:13 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், வரும், 2026 சட்டசபை தேர்தல், ஓட்டு எண்ணிக்கை மையம், நாமக்கல் அரசு சட்ட கல்லுாரியில் அமைக்கப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாமக்கல் லோக்சபா தொகுதியில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் எண்ணப்பட்டன. இதனால், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதிலும், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டன.
இதையடுத்து, கடந்த சில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கான தேர்தல் மையம், திருச்செங்கோடு விவேகானந்தா தனியார் கல்லுாரியில் அமைக்கப்பட்டு, அங்கு தனித்தனி அறைகளில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில், நாமக்கல் அரசு சட்ட கல்லுாரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரி வளாகத்தில் போதுமான கட்டட வசதி உள்ளது. மேலும், நாமக்கல் - திருச்செங்கோடு மெயின் சாலையில் இருந்து சட்ட கல்லுாரி வளாகம், 500 மீட்டர் தொலைவில் உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், போதிய பாதுகாப்பு வசதி அளிக்க முடியும்.
அவற்றை கருத்தில் கொண்டு, முதல் முறையாக, வரும், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை, நாமக்கல் சட்டக்கல்லுாரி வளாகத்தில் எண்ணும் வகையில், ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நாமக்கல் போலீஸ் எஸ்.பி., விமலா தலைமையில், ஆர்.டி.ஓ., சாந்தி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரியா, தேர்தல் தாசில்தார் செல்வராஜ் உள்ளிட்டோர், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, தேர்தலில் பதிவான ஓட்டுகளை தொகுதி வாரியாக எண்ணுவதற்கான இடங்கள், எளிதாக வந்து செல்வதற்கான வழிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான, 'ஸ்ட்ராங் ரூம்' உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.

