ADDED : ஜூலை 28, 2026 06:10 PM
குன்னுார்: ‘ குன்னுாரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், 8 நாட்களில் அகற்றப்படும்,’ என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், ஊட்டியில் நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் விபரம்:
குன்னுாரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பிடங்களில், அதிகபட்சமாக, ரூ.10 கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும்; மினி பஸ்களில் தன்னிச்சையாக கட்டணம் உயர்த்தியதற்கு தீர்வு காண வேண்டும்; குன்னுார் சிம்ஸ் பூங்கா, கேஷ் பஜார் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, பயணிகளின் வசதிக்காக புதிய நிழற்குடைகள் வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டன.
இதனை கேட்டறிந்த கலெக்டர், ‘ சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும், 8 நாட்களில் அகற்றி மக்கள் எவ்வித இடையூறின்றி நடந்து செல்ல வழிவகை செய்யப்படும். கழிப்பிடங்களில் அறிவிப்பு பலகையை மக்கள் பார்வைக்கு வைக்கவும், மினி பஸ் உரிமையாளர்களிடம் பேசி பஸ் கட்டண உயர்வுக்கு தீர்வு காணப்படும். குன்னுார், ஊட்டி இடையே தினமும் இயங்கும், 54 பஸ்களின் கால அட்டவணையை பஸ் ஸ்டாண்டில் தெளிவாக வைக்கப்படும்,’ என்றார்.
