/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை
/
நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 06, 2024 09:50 PM
மஞ்சூர் : 'நிறுத்தப்பட்ட பஸ்களை கிராம மக்களின் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே, கன்னேரி மந்தனை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மஞ்சூர் வந்து செல்கின்றனர்.
ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஊட்டியிலிருந்து காலை, 6:00 மணி, 10:30 மணி, மாலை, 5:30 மணிக்கு புறப்படும் அரசு பஸ்கள், கன்னேரி மந்தனை, எடக்காடு வழியாக மஞ்சூருக்கு சென்று வந்தது.
அதேபோல், காலை, 8:00 மணிக்கு பஸ் ஒன்று பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக கன்னேரி மந்தனை கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தது. மேற்கண்ட நேரப்படி இயக்கப்பட்டு வந்த அனைத்து பஸ்களும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எவ்வித முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் மனு அளித்து, பல முறை நேரில் சென்று கோரிக்கை குறித்து தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'கோரிக்கை மனு குறித்து அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து, நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்,' என்றனர்.