ADDED : ஜூலை 20, 2026 06:03 PM
கூடலுார்: கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில், தனியார் நிறுவனம் மூலம் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கூடலுாரில், செயல்பட்டு வரும் தோட்ட தொழிலாளர்கள் தொழிற் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும், தனியார் நிறுவனங்கள் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு, இம்மையத்தில் படித்து முடித்த, 80 மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் தொழிற் பயிற்சி மையத்தில் நடந்தது. ஓசூர் தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு அதிகாரி விமல்ராஜ், தொழிற்சாலையின் தர கட்டுப்பாடு மேலாளர் பாலமுருகன் ஆகியோர், பிட்டர், வயர் மேன் மற்றும் எலக்ட்ரீசியன் பிரிவுகளில் படித்த மாணவர்களிடம் நேர்காணல் செய்து, பயிற்சியுடன் கூடிய பணிக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சம்பளத்துடன், தங்குவதற்கான இடவசதி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மையத்தின் முதல்வர் ஷாஜி ஜார்ஜ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
