/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆசிரியர்கள் போராட்டம் பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
/
ஆசிரியர்கள் போராட்டம் பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
ஆசிரியர்கள் போராட்டம் பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
ஆசிரியர்கள் போராட்டம் பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
ADDED : ஜூலை 03, 2024 10:02 PM
அன்னுார் : ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால், அன்னுார் வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது.
தொடக்கக் கல்வித் துறையில், பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும்.
பதவி உயர்வு தொடர்பாக வழக்கு நடைபெற்று வருவதால் தற்போது நடைபெறும் கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) தமிழகம் முழுவதும், அனைத்து கல்வி மாவட்டங்களிலும், ஜூலை 3ம் தேதி (நேற்று) தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தது.
அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 260 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று டிட்டோஜாக் அறிவித்த போராட்டத்தால் 130 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால் பெரும்பாலான பள்ளிகளில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு, மாற்றுப் பணியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, 91 பள்ளிகளிலும் குறைந்தது ஒரு ஆசிரியராவது நியமிக்கப்பட்டனர்.
எனினும் 100 முதல் 150 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதால் வெறுமனே பள்ளி மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. பல பள்ளிகளில் கற்பித்தல் நடைபெறவில்லை.
கோவையில் நடந்த மறியல் போராட்டத்தில், அன்னுார் வட்டாரத்திலிருந்து டிட்டோஜாக் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.