/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
100 நாள் வேலை திட்ட தொழிலாளர் எண்ணிக்கையில் 50 சதவீதம் சரிவு! சம்பளம் தாமதமாவதால் தொழிலாளர்கள் விரக்தி
/
100 நாள் வேலை திட்ட தொழிலாளர் எண்ணிக்கையில் 50 சதவீதம் சரிவு! சம்பளம் தாமதமாவதால் தொழிலாளர்கள் விரக்தி
100 நாள் வேலை திட்ட தொழிலாளர் எண்ணிக்கையில் 50 சதவீதம் சரிவு! சம்பளம் தாமதமாவதால் தொழிலாளர்கள் விரக்தி
100 நாள் வேலை திட்ட தொழிலாளர் எண்ணிக்கையில் 50 சதவீதம் சரிவு! சம்பளம் தாமதமாவதால் தொழிலாளர்கள் விரக்தி
ADDED : ஜூலை 03, 2024 10:07 PM
பெ.நா.பாளையம் : கோவை புறநகர் பகுதிகளில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற நூறு நாள் வேலை திட்டம் தமிழகத்தில் முதல் கட்டமாக, 2006 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டம் தொடங்கப்பட்டவுடன், கூலி தொழிலாளர்கள் குறிப்பாக ஏராளமான பெண்கள் இதில் ஆர்வமாக ஈடுபட்டனர்.
சம்பளம் வாரம் ஒருமுறை உடனடியாக, நேரடியாக வழங்கப்பட்டது. ஆனால் நாளடைவில் பல ஊராட்சிகளில் கூலி ஆட்கள் வராமல், அவர்கள் பெயரில் போலியாக சம்பளக்கூலி வழங்கப்பட்டது போல போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, 100 நாள் திட்டத்தில் பணியாற்றும் நபர்களின், வங்கி கணக்கில் நேரடியாக சம்பளத்தை செலுத்தும் நிலை உருவாக்கப்பட்டது.
சம்பளம் வழங்கும் முறை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பணி நடந்த பகுதி ஜி.பி.எஸ்., கருவியால் அளவீடு செய்யப்பட்டு, கூலி வழங்கும் நடைமுறை உருவானது.
குறைந்தது
பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாக்கி செயல்படுத்தப்பட்டாலும், இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் கூலி வழங்காமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மோசடிகளும்தொடர்கின்றன.
இதனால், 100 நாள் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக, 50 சதவீதம் வரை குறைந்து, தற்போது ஒவ்வொரு ஊராட்சியிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக, 20 முதல், 25 பேர் மட்டும் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் கூறுகையில்,' தற்போது, இத்திட்டத்தில் பணியாற்றும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 314 ரூபாய் வழங்கப்படுகிறது. இக்கூலி பணியை முடித்தால் மட்டுமே கிடைக்கும்.
காலை, 9.00 மணிக்கு துவங்கும் வேலை மாலை, 5.00 மணி வரை மேற்கொள்ள வேண்டியுள்ளது. காலை முதல் மாலை வரை கஷ்டப்பட்டு வேலை செய்தாலும், கூலி உடனடியாக கிடைப்பதில்லை. ஓரிரு மாதங்கள் கழித்துதான் நம் வங்கி கணக்கில் கிடைக்கிறது.
தயக்கம்
ஆனால், வேறு விவசாய பணிகளுக்கு தினக்கூலியாக சென்றால் காலை, 8.00 மணிக்கு பணியை துவக்கினால் மதியம், 2.00 மணிக்கு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விடலாம்.
காலை, 10.00 மணிக்கு டீ, வடை உண்டு. அன்றைய கூலி, 300 ரூபாய் உடனடியாக கிடைத்துவிடும். மதியத்திற்கு பிறகு பகுதி நேரமாக வேறு வேலைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் பலர், 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்' என்றனர்.