/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
20 ஆயிரம் மர நாற்றுகள்! அடர்ந்த வனப்பகுதியாக மாற்றும் நடவடிக்கை
/
20 ஆயிரம் மர நாற்றுகள்! அடர்ந்த வனப்பகுதியாக மாற்றும் நடவடிக்கை
20 ஆயிரம் மர நாற்றுகள்! அடர்ந்த வனப்பகுதியாக மாற்றும் நடவடிக்கை
20 ஆயிரம் மர நாற்றுகள்! அடர்ந்த வனப்பகுதியாக மாற்றும் நடவடிக்கை
ADDED : பிப் 05, 2024 11:54 PM
மேட்டுப்பாளையம்:வனப்பகுதியை, மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியாக மாற்ற, மேட்டுப்பாளையம்
வனப்பகுதியில், புதிதாக, 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்த
மழை காலம் துவங்கும் முன், மேலும் வனப்பகுதியில் மர நாற்றுகளை நடவு செய்ய,
தற்போது நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம் வனப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்துள்ளன. அடிவாரத்தில் உள்ள நிலப்பகுதிகளில், மரங்கள் அடர்த்தியாக இல்லாமல், அதிகளவில் நிலப்பகுதியாக உள்ளன. வனவிலங்குகளுக்கு பிடித்தமான உணவு வகைகள் அதிகளவில் இல்லாததால், வனவிலங்குகள் இரவில் இரை தேடி, விவசாய நிலங்களுக்கு வருகின்றன. யானைகள் வருவதை வனத்துறையினர் ஓரளவு கட்டுப்படுத்தினாலும், பல இடங்களில் விவசாய பயிர்களை அழித்து சேதம் செய்து வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நம்பிக்கை
பொதுவாக, மழை காலம் துவங்கும் போது, வனப்பகுதியில் வனத்துறையினர் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது வழக்கம். அவ்வகையில், மேட்டுப்பாளையம் வனத்துறையினர், வனப்பகுதியில் காலியாக உள்ள இடங்களில், மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர். தற்போது அது ஓரளவு உயிர் பெற்று வளர்ந்துள்ளதால், இன்னும் சில ஆண்டுகளில், இந்த மரங்கள் வனவிலங்குகளுக்கு உணவாக பயன்படும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது: மேட்டுப்பாளையம் வனப்பகுதி, 10 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானைகள், காட்டு மாடுகள், மான்கள், சிறுத்தை, புலி, குரங்குகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அனைத்தும், வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகளை நம்பி உள்ளன. வனப்பகுதியில் மரங்கள் இல்லாத 2,000 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் மரக்கன்றுகளை நடவு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டது.
உற்பத்தி பணிகள்
வனப்பகுதியில் வனவிலங்குகள் சாப்பிடக்கூடிய, மரங்களின் விதைகளை சேகரித்து அதை நாற்றாக வளர்க்கப்பட்டது. முதற்கட்டமாக, 20 ஆயிரம் மர நாற்றுகளை, வனப்பகுதியில் கடந்த மாதம், மழை பெய்த போது நடவு செய்யப்பட்டது. இதில் வனவிலங்குகளுக்கு பிடித்தமான பழ மரங்கள், தீவனமாக பயன்படும் 13 வகையான மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது நாற்றுகள் ஓரளவு வளர்ந்துள்ளன.
இனிவரும் நாட்களில், மழை பெய்யவில்லை என்றால், டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று, நடவு செய்த மர நாற்றுகளுக்கு, தண்ணீர் ஊற்ற ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது ஓரளவு வளர்ந்த பின், வனவிலங்குகளுக்கு உணவாக பயன்படும். அதைத் தொடர்ந்து அடுத்த மழை காலம் துவங்கும் முன், மேலும் வனப்பகுதியில் மர நாற்றுகளை நடவு செய்ய, தற்போது நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.