இயற்கைக்கு பாதிப்பு இல்லாத தீபாவளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இயற்கைக்கு பாதிப்பு இல்லாத தீபாவளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
UPDATED : நவ 01, 2026 08:21 PM
ADDED : நவ 01, 2026 08:16 PM
கூடலூர்: மசினகுடி பகுதியில், இயற்கைக்கு பாதிப்பு இல்லாத தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.
மசினகுடி வாழைத்தோட்டம், ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், இயற்கைக்கு பாதிப்பு இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி பசுமை படை பொறுப்பாசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘நாம் இயற்கை சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதியில் வசித்து வருகிறோம். எனவே, இயற்கை மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிக ஒலி எழுப்பும் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.’’ என்றார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், 'வனம் சூழ்ந்த இப்பகுதியில், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் வான வேடிக்கை பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் சி.எஸ்.ஐ.ஆர்., தரசான்று பெற்ற பட்டாசுகளை வாங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
மாணவர்கள் அகில், ஜாஸ்மின் ஆகியோர் பாதுகாப்பான தீபாவளி குறித்து பேசினர். நிகழ்ச்சியில், பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
