/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரதமரின் உதவி தொகை நிறுத்திய வங்கி
/
பிரதமரின் உதவி தொகை நிறுத்திய வங்கி
ADDED : டிச 11, 2025 06:09 AM
குன்னுார்: நீலகிரி மாவட்டம், குந்தா, பெங்கால் மட்டம் மாசிகண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி போஜராஜன், மஞ்சூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.
இவரது வங்கி கணக்கிற்கு, பிரதம மந்திரியின் கிஷான் சம்மான் மானியமாக, 16 ஆயிரம் ரூபாய், 8 தவணைகளில் வந்துள்ளது. இந்த தொகையை ஓராண்டு காலமாக எடுக்க விடாமல் வங்கி நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக, குன்னுார் பாதுகாப்பு சங்கத்தின் வாயிலாக, நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், விவசாய பணிகளுக்காக, பிரதமர் வழங்கும் மானிய தொகை விவசாயிகள் செலவிடுவதற்கு என்பதால் இதனை தடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை. வேறு வங்கி கடன்கள் இருந்தாலும் மானிய தொகை வழங்க வேண்டும். இந்நிலையில், வங்கி கடனை காரணம் காட்டி நிறுத்தி வைத்ததுடன், கே.ஒய்.சி., விபரங்களை தரவில்லை என, வங்கி தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட, ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர் சசி ராஜா ஆகியோர், 'விவசாயிக்கு ஒரு மாதத்திற்குள் மானிய தொகையை விடுவிக்கவும், தவறினால், 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டம்,' என, தீர்ப்பளித்தனர். வழக்கு தொடுத்த, குன்னுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்துரை கூறுகையில், ''மாவட்டத்தில் வங்கிகளின் தவறான அணுகுமுறையால் இது போன்று ஏராளமான விவசாயிகள் மானியம் பெற இயலாமல் உள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும் முன்னோடி வங்கியும் அனைத்து வங்கிகளுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கி விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

