அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் நெல்லியாம்பதி தொழிலாளர்கள்
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் நெல்லியாம்பதி தொழிலாளர்கள்
UPDATED : நவ 06, 2026 07:31 PM
ADDED : நவ 06, 2026 05:32 PM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அவதிப்படுகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி சந்திரமலை எஸ்டேட்டின் ஊத்துகுழி பகுதியிலுள்ள தொழிலாளர் குடியிருப்புகளில் உள்ள பொதுக் கழிப்பறை கதவு மற்றும் கூரை இன்றி காட்சியளிக்கிறது.
கூரையின் பல இடங்களில் ஓடுகள் இல்லாததோடு, மீதமுள்ள ஓடுகளும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. செப்டிக் டேங்க் கான்கிரீட் தளம் விரிசலடைந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இப்பிரசனை குறித்து பலமுறை முறையிட்டும் எஸ்டேட் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகமும் இப்பிரசனையை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றன.
தொழிலாளர் நலனை உறுதி செய்ய வேண்டிய தோட்ட ஆய்வு அதிகாரியோ அல்லது தொழிற்சங்கத் தலைவர்களோ இதுவரை நேரில் ஆய்வு செய்யவில்லை. இதே அவலநிலை மணலாரூ எஸ்டேட்டின் தேனிபாடி, ஏலம் ஸ்டோர் பகுதிகளிலும் நீடிக்கிறது.
குறைபாடுகள் குறித்துப் புகார் அளிக்கும் தொழிலாளர்களை, தொலைதூரப் பிரிவுகளுக்குப் பணியிட மாற்றம் செய்வது, மிகக் கடினமான பணிகளைத் திணிப்பது, தனியாக வேலை செய்ய வைப்பது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில், எஸ்டேட் நிர்வாகம் ஈடுபடுவதால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
