/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பந்தலுாரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 08, 2024 10:41 PM

பந்தலுார் ; பந்தலுார் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை நிர்வாகம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து, தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியை நடத்தின.
'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் வரவேற்றார்.
டாக்டர் யாசின் தலைமை வகித்து பேசுகையில், ''புகைப்பிடித்தல், போதை போன்ற பயன்பாட்டின் காரணமாக புற்றுநோய் பரவல் ஏற்பட்டாலும், உணவு மூலம் அதிக அளவு புற்றுநோய் பரவல் ஏற்படுகிறது.
கடைகளில் விற்கப்படும் பொறித்த உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து குழந்தைகள் விருப்பப்படும் வகையிலான நொறுக்கு தீனிகள் போன்றவற்றை வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை, அரசு மருத்துவமனைகள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம்.
எனவே, உடல் நலனை பாதிக்காத வகையிலான உணவுகளை உட்கொண்டு சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,'' என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவ சுப்ரமணியம் பேசுகையில், ''இளைய தலைமுறையினர் புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதை அதிகம் விரும்புவதால், உடலில் பல்வேறு பாதிப்புஏற்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ளது. இதனை மாற்றுவதற்கு பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவதுடன், தரமான இயற்கை முறையில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்வதற்கு தயாராக வேண்டும்,''என்றார்.
நிகழ்ச்சியில் செவிலியர்கள் பிந்து, மனிஷா, என்.ஐ.ஐ.டி., நிறுவன பணியாளர் அஜித்குமார், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். விஜயகுமார் நன்றி கூறினார்.