/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ் தாக்கியதில் இளைஞர் பலி; அபராதம் விதித்தது ஆணையம்
/
போலீஸ் தாக்கியதில் இளைஞர் பலி; அபராதம் விதித்தது ஆணையம்
போலீஸ் தாக்கியதில் இளைஞர் பலி; அபராதம் விதித்தது ஆணையம்
போலீஸ் தாக்கியதில் இளைஞர் பலி; அபராதம் விதித்தது ஆணையம்
UPDATED : டிச 12, 2025 09:01 AM
ADDED : டிச 12, 2025 04:25 AM
நீலகிரி: நீலகிரியில், போலீசார் தாக்கியதில் இளைஞர் இறந்த விவகாரத்தில், 9 போலீசாருக்கு, 7.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தமிழக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், சேரம்பாடியை சேர்ந்த மதியழகன் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2020ல் பணத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க, சேரம்பாடி காவல் நிலையத்திற்கு மகன் சசீலனுடன் சென்ற போது, என்னை காவல் துறையினர் அடித்து உதைத்தனர். தட்டிக்கேட்ட மகனையும் தாக்கினர்.
இரும்பு தடி அடி
மன உளைச்சலுக்கு ஆளான மகன் சசீலன், காவல் துறையினரை திட்டி வீடியோ வெளியிட்டார்.
தொடர்ந்து, என் மகனை சேரம்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, காவலர்கள் இரும்பு தடியால் அடித்து சித்ரவதை செய்தனர்.
இதனால் எனது மகனின் ஆணுறுப்பின் நரம்பு சேதமடைந்தது; சிறுநீரகமும் பாதிக்கப் பட்டது.
பந்தலுார், ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, 2020 ஜூலை 2ல் அவர் உயிரிழந்தார். போலீசாரின் கொடூர தாக்குதலே என் மகன் உயிரிழப்புக்கு காரணம். காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
ஆணையம் விசாரணையில், சேரம்பாடி போலீசார் கொடூரமாக தாக்கியதால், சசீலன் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அவருக்கு, எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்காமல் சிறைக்கு அழைத்து சென்றதும், அங்கிருந்து கூடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் சிறை பதிவேட்டில் உள்ளது. இந்த சம்பவத்தை, போலீசார் மறைக்க முயற்சித்துள்ளனர்.
இழப்பீடு
சசீலனின் தந்தை மதியழகனுக்கு, ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு, 7.50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.
இதில், சேரம்பாடி எஸ்.ஐ., சந்துரு, இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு ஆகியோரிடம் தலா, 2 லட்சம் ரூபாய், காவலர்கள் பிரபாகரன், ஜெயராஜ், சுஜித், முத்துகிருஷ்ணன், சுல்தான் அலாவூதின், ஷாஜி, கோபாலகிருஷ்ணன் ஆகிய ஏழு பேரிடம், தலா, 50,000 ரூபாயை வசூலிக்க வேண்டும். இந்த 9 பேர் மீதும் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

