UPDATED : அக் 27, 2026 06:17 PM
ADDED : அக் 27, 2026 06:14 PM
கோத்தகிரி:
‘தோட்டக்கலை பயிர்களை கனமழை மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’ என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கோத்தகிரி வட்டார விவசாயிகள், பயிர்களை கனமழை மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், முள்ளங்கி, பந்தல் காய்கறிகள், அயல்நாட்டு காய்கறிகளான சிவப்பு முட்டைகோஸ், சுகுனி, லெட்டூஸ் மற்றும் செலரி போன்ற பயிர்களுக்கு, மழை நீர் தேக்கத்தை தவிர்க்க தகுந்த வடிகால் வசதி செய்ய வேண்டும்.
உரமிடுதலை தவிர்க்க வேண்டும்
உரம் இடுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் போன்றவற்றை தற்காலிகமாக தவிர்ப்பதுடன், செடிகளில் காய்ந்த இலைகளை அகற்ற வேண்டும். பல்லாண்டு பயிர்களான அவகெட்டோ, ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா மற்றும் பலா மரங்களில் உள்ள காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதிகளில் மண்ணை அணைப்பதுடன், தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
பசுமை குடில்கள் மற்றும் நிழல் வலை குடில் அடிப்பகுதியை கம்பிகளால் உறுதியாக நிலத்துடன் இணைத்து, கதவுகள் மற்றும் ஜன்னல்களை நன்கு மூடி, உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதன் வாயிலாக, காற்றினால் பசுமை குடில்களுக்கு ஏற்படும் சேதாரங்களை தடுக்க முடியும்.
பருவ மழை தாக்கம் குறைந்த பிறகு, மண் பரிசோதனை செய்து, அதன் அறிக்கையின் அடிப்படையில் உரம் பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி காய்கறி பயிர்களை விவசாயிகள் காப்பாற்ற வேண்டும். பயிர் சேதம் ஏற்படும் பட்சத்தில், கோத்தகிரி தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
