UPDATED : நவ 01, 2026 08:21 PM
ADDED : நவ 01, 2026 08:16 PM

ஊட்டி:
ஊட்டியில் ஏ.ஐ.டி.யு.சி., டேன் டீ தொழிலாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில், தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது அரசு தேயிலை தோட்ட (டேன் டீ ) நிறுவனம். கோத்தகிரி குயின்சோலை, குன்னூர் குயில் ஹில், கூடலூர் பகுதியில், நடுவட்டம், பாண்டியாறு, சேரம்பாடி, சேரங்கோடு மற்றும் நெல்லியாளம் பகுதிகளில், தேயிலைத் தோட்டம் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
இதில், தற்காலிக மற்றும் நிரந்த தொழிலாளர்கள், ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், ஊட்டி ஏ.டி.சி., திடலில் ஒருங்கிணைந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டத் தலைவர் போஜராஜன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், இ. கம்யூ., எம்.எல்.ஏ., மாரிமுத்து, மூத்த தலைவர் பெள்ளி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 'டேன் டீ மற்றும் அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, 700 ரூபாய் தினக்கூலி, 20 சதவீதம் போனஸ், தரமான தனி இலவசக் குடியிருப்பு வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற பணியாளர்களின் வாரிசுகளின் கல்வித் தகுதிக்கு ஏற்ப, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; டேன் டீ நிறுவனத்தை டாப் கானுடன் இணைத்து, தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்; தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்' என, கோஷம் எழுப்பப்பட்டது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
