ADDED : ஆக 17, 2026 07:02 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே பாட்டவயல் அரசு நடுநிலைப்பள்ளி, கையுன்னி அரசு துவக்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவையைச் சேர்ந்த துாரிகை அறக்கட்டளை, சமூக ஆர்வலர் சந்திரசுரேஷ் குழுவினர் இணைந்து, இரண்டு பள்ளிகளில் படிக்கும், 326 மாணவர்களுக்கு, 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, கல்வி உபகரண பொருட்களை வழங்கினர். கையுன்னி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார்.
துாரிகை அறக்கட்டளை நிறுவனர், ரஞ்சித் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பட, அரசு கல்வித்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோரும் கைகோர்த்தால் மட்டுமே, மாணவர்களின் கல்வி மேம்பட்டு, அரசு பள்ளிகளும் வளர்ச்சி காணும்,’’ என்றார். பாட்டவயல் பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி, துாரிமை அமைப்பினர் நிர்வாகி ஸ்னேகா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ஜோசப் நன்றி கூறினார்.
