'ஸ்டே' கம்பியை ஆபத்தான மரத்தில் கட்டி உள்ள மின் வாரியம்
'ஸ்டே' கம்பியை ஆபத்தான மரத்தில் கட்டி உள்ள மின் வாரியம்
ADDED : ஜூலை 07, 2026 07:05 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி சுங்கம் பகுதியில், விழும் நிலையில் உள்ள மரத்தில் மின்கம்பத்தின், 'ஸ்டே' கம்பியை கட்டி உள்ளதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பந்தலுார் அருகே சேரம்பாடி சுங்கம் பகுதி, சாலை ஓரத்தில் உயரமான புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின்சார கம்பிகளும் பொருத்தப்பட்டு உள்ளது. மின் கம்பங்கள் கீழே விழாமல் பாதுகாக்கும் வகையில், ஸ்டே கம்பிகள் கட்டப்பட்டு ஒருமுனை மின் கம்பத்தின் மீதும், மறுமுனை தரை தளத்தில் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் தளத்தின் மீதும் பொருத்தப்பட்டு இருக்கும்.
ஆனால், தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் கட்டப்பட்ட, 'ஸ்டே' கம்பிகள் பெயரளவுக்கு விழும் நிலையில் உள்ள மரங்களில் கட்டப்பட்டு உள்ளது. மழை மற்றும் காற்றில் மரம் சாய்ந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
