UPDATED : நவ 08, 2026 04:29 PM
ADDED : நவ 08, 2026 04:26 PM

பந்தலுார்: பந்தலூர் அருகே காவயல் பகுதியில் முகாமிட்டுள்ள யானை, குட்டியுடன் கொஞ்சி மகிழும் காட்சி பார்வையாளர்களை மட்டும் இன்றி குட்டீஸ்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பந்தலூர் அருகே, சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, காவயல் டான் டீ குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. ஒரு குட்டியும் அதன் தாயும் அடிக்கடி, கொஞ்சி மகிழ்ந்து வருகிறது. யானைகளின் பாசத்துடன் கூடிய சேட்டை யானை அச்சத்தில் இருக்கும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த காட்சிகளை பார்க்கும் குட்டீஸ்கள், அங்கிருந்து செல்லாமல் யானைகளின் சுவாரஸ்யங்களை பார்த்து ரசிப்பதுடன், கைத்தட்டி யானைகளையும் குஷிப்படுத்தி வருகின்றனர்.
குடியிருப்புகளை ஒட்டி யானைகளின் இந்த சேட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இரவு, அதிகாலை நேரங்களில் இப்பகுதி மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
