/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூச்சிக்கொல்லி மருந்தை ஊக்குவித்ததால் விவசாயிகள் அதிருப்தி! அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
/
பூச்சிக்கொல்லி மருந்தை ஊக்குவித்ததால் விவசாயிகள் அதிருப்தி! அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
பூச்சிக்கொல்லி மருந்தை ஊக்குவித்ததால் விவசாயிகள் அதிருப்தி! அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
பூச்சிக்கொல்லி மருந்தை ஊக்குவித்ததால் விவசாயிகள் அதிருப்தி! அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
ADDED : நவ 06, 2025 11:02 PM

குன்னூர்: நீலகிரியில் இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிக்கும் நிலையில் பூச்சிக்கொல்லி ரசாயன குடோனாக பயன்படுத்த, அரசின் வணிக வளாகக் கடைகளை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காபி, ரப்பர் போன்ற பணப்பயிர்கள், உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், டர்னிப், முட்டைகோஸ் உள்ளிட்ட பல மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தற்போது, மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கர் பரப்பில் தேயிலை மற்றும் 17 ஆயிரம் ஏக்கரில் மலை தோட்ட காய்கறிகள் விவசாயம் மேற்கொண்டு, நீலகிரியின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இவை உள்ளன.
அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் பலரும் தங்களது விலை நிலங்களில் அதிகளவில் ரசாயன உரங்களை கொட்டி, பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளை தெளிப்பது தொடர்கிறது. ரசாயனங்களால் மண் மற்றும் நீர் மாசடைவது; மனிதர்களுக்கு புற்றுநோய் உட்பட தீராத நோய்கள் ஏற்படுவது; சுற்றுச்சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது போன்றவற்றால் இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தடைக்கு ஆதரவு சிவப்பு மற்றும் மஞ்சள் முக்கோணம் இடப்பட்ட வீரியமிக்க ரசாயன மருந்துகள் உட்பட வீரியமிக்க ரசாயன பயன்பாடுக்கு தடை செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம், மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், ரசாயன பூச்சிக்கொல்லி உரங்களை தடுக்க வேண்டிய அரசு துறைகளே இதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் எடப்பள்ளியில், 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்த ஒருங்கிணைந்த வேளாண் மையத்தின் அருகில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது பூச்சிக்கொல்லி உர கலவை செய்யும் குடோன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் விஸ்வநாதன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில், 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் நிலையில், எடப்பள்ளி ஒருங்கிணைந்த வேளாண் மையத்தில் உள்ள வணிக வளாகத்தில், 3 கடைகளை, நேஷனல் அக்ரோ என்ற பூச்சிக்கொல்லி நிறுவனத்திற்கு அரசு துறையே வழங்கியுள்ளது. விவசாயிகளின் விலை பொருட்கள் விற்க நீலகிரியில் ஒருங்கிணைந்த வேளாண் மையம் கொண்டுவர, தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர்கள் என பலருக்கும் மனுக்கள் வழங்கி, பல ஆண்டுகளாக போராடி கொண்டு வரப்பட்டது.
இங்கு விவசாயிகளின் விலை பொருட்களை விற்கவும், பாதுகாக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்காமல், தடை செய்ய வேண்டிய பூச்சி க்கொல்லி மருந்துகள் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை போன்று, விவசாயிகளுக்கு, பொருட்களை இறக்கி வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். நீலகிரி வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை வேளாண் துணை இயக்குனர் கண்ணாமணி கூறுகையில், கடைகளை இலவசமாக வழங்க கேட்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள் ளது, என்றார்.

