UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 06:24 PM

குன்னுார்: குன்னுார்– மேட்டுப்பாளையம் இடையே சீறி பாய்ந்த வெள்ளத்திலும், சீரமைப்பு பணிகள் நடந்தன.
குன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே பெய்த கனமழையால், கடந்த, 23ல் இரவில் மலை ரயில் பாதையில், 56 இடங்களில் நிலச்சரிவும் மண் சரிவும் ஏற்பட்டது. பல இடங்களில் பெரிய பாறைகள், மரங்கள் மற்றும் மண் குவியல்கள் சரிந்து விழுந்தன. சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடந்து வந்த நிலையில், மீண்டும் பெய்த கனமழையால், 9 இடங்களில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
அதில், ராட்சத பாறைகள் மற்றும் மரங்களுடன் மீண்டும் மண்சரிவு ஏற்பட்ட மலை ரயில் பாதையில், காட்டாற்று வெள்ளம் தண்டவாளத்தின் வழியே சீறிப் பாய்ந்து வந்த நிலையிலும், பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பாறைகளை உடைத்தும், மண் குவியல்களை அகற்றியும் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இன்னும், 10 இடங்களில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளது.
