UPDATED : நவ 15, 2026 05:44 PM
ADDED : நவ 15, 2026 05:44 PM

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கள் வாட்டம் கண்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, இரண்டாவது சீசன் நடந்து வருவதால், பார்வையாளர்களின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட, பல்வேறு வகையான வண்ண மலர்கள் மாடங்களில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டன.
ஆனால், இந்த மலர்கள் தற்போது, பெரும்பாலும் வாட்டம் கண்டுள்ளன. அதே நேரத்தில், சுற்றுலா பயணிகளிடம் இருந்து, 50 மற்றும் 100 ரூபாய் என கட்டணம் வசூலிக்கும் பூங்கா நிர்வாகம், மலர்களை பாதுகாப்பதில் தவறிவிட்டதாக, சுற்றுலா பயணிகள் ஆதங்கத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
பூங்கா நிர்வாகம், பயணியரை கவரும் விதமாக, வாடிய மலர்களை மாற்ற வேண்டும்.என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.
