/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொட்டும் மழையில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்
/
கொட்டும் மழையில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்
ADDED : ஆக 17, 2025 09:35 PM

கூடலுார்; கூடலுாரில் வி.எச்.பி., சார்பில் கொட்டும் மழையில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
கூடலுாரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பாலர் ஊர்வலம் நடந்தது. முனீஸ்வரர் கோவிலில், துவங்கிய ஊர்வலத்துக்கு, வி.எச்.பி., மாவட்ட இணை செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.
ஊர்வலத்தை, நம்பாலக்கோட்டை கிரிவல குழு செயலாளர் நடராஜ் துவக்கி வைத்தார். ஏராளமான குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர். ஊர்வலம் துவங்கிய போது மழை பெய்தது. குழந்தைகளை பெற்றோர்கள் குடை பிடித்து ஊர்வலத்தில் அழைத்து வந்தனர். ஊர்வலம், விநாயகர் கோவிலில் நிறைவு பெற்றது. அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வி.எச்.பி., நகரதலைவர் சாமுண்டி, செயலாளர் ராமு, இணை செயலாளர் மதுரை வீரன், நிர்வாகிகள் தமிழ் செல்வன், செந்தில், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* முதுமலை, மசினகுடியில் ஊர் பொதுமக்கள் சார்பில், 4ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. மசினகுடி துர்கா பரமேஸ்வரி கோவிலில், காலை, 11:00 மணிக்கு, கோ பூஜையுடன் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்துக்கு விழா ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார் .
சத்திய சாய் மாருதி அறக்கட்டளை அறங்காவலர் ஸ்ரீகுமார் துவக்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணர், ராதை காட்சியளித்தனர். ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர். ஊர்வலம் மசினி அம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. அங்கு சிறப்பு பூஜைகளுடன் ஆன்மிக சொற் பொழிவு நடந்தது. தொடர்ந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஊர் மக்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.