தேர்தல் தோல்வி எதிரொலி: மா. கம்யூ., மாவட்டச் செயலாளர் நீக்கம்
தேர்தல் தோல்வி எதிரொலி: மா. கம்யூ., மாவட்டச் செயலாளர் நீக்கம்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:14 PM

பாலக்காடு: பாலக்காடு மாவட்ட மா. கம்யூ. கட்சி கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ் பாபு அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, கொல்லங்கோடு தொகுதியின், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தாமராக்ஷன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலக்காட்டில் இரு தினங்களாக நடைபெற்ற, கட்சியின் விரிவாக்கப்பட்ட மாவட்டக் குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டது.
திருத்தால, கோங்காடு மற்றும் சித்தூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில், கட்சி சந்தித்த படுதோல்வியே, சுரேஷ் பாபுவின் பதவி நீக்கத்திற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
சுரேஷ் பாபுவின் முதிர்ச்சியற்ற முடிவுகளும், தன்னிச்சையான அதிகாரப்போக்கும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக, கூட்டத்தில் காரசாரமான விமர்சனங்கள் எழுந்தன.
அதிருப்தியாளர்களின் பிரச்னைகளையும், உட்கட்சி மோதல்களையும் முறையாகக் கையாளத் தவறியதே, தேர்தல் தோல்விக்கு வழிவகுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தலைமை அதை மேலும் பெரிதாக்கியதாக ஏரியா கமிட்டி கூட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலோடு ஒப்பிடுகையில், மாவட்டத்தில் மா. கம்யூ. கட்சி 67,000 ஓட்டுகளை இழந்துள்ளது.
கொழிஞ்சாம்பாறையில் நிலவிய உட்கட்சி அதிருப்தி, நல்லேப்பிள்ளி மற்றும் பெருவெம்பு பகுதிகளில் ஓட்டுகள் பெருமளவு குறையக் காரணமானது.
பா.ஜ., ஓட்டுகள் காங்கிரசுக்குச் சென்றாலும், அதை எதிர்கொள்ளும் கட்டமைப்பு இருந்தும் உட்கட்சி அமைப்பு ரீதியான குளறுபடிகளால் தோல்வி ஏற்பட்டது.உள்ளூர் அளவிலான கோஷ்டிப் பூசலே தோல்விக்கு வழிவகுத்தது.
இத்தகைய சூழலில், நெருக்கடிகளைத் தீர்க்க மாவட்டத் தலைமையும் செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சுரேஷ் பாபு மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது.
