/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமி பலாத்கார வழக்கில் இசை ஆசிரியருக்கு ஆயுள்
/
சிறுமி பலாத்கார வழக்கில் இசை ஆசிரியருக்கு ஆயுள்
ADDED : டிச 06, 2025 05:27 AM
ஊட்டி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இசை ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.
குன்னுார் பகுதியை சேர்ந்த, 14 வயது மாணவி அந்த பகுதியில் தனியார் பள்ளியில், 10-ம்வகுப்பு படித்து வந்தார். சிறுமிக்கு இசை வகுப்பில் சேர ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோர் அருவங்காட்டில் உள்ள இசை பயிற்சி பள்ளியில் கடந்த, 2023 ஆண்டு நவ., மாதம் சேர்த்தனர்.
இசை ஆசிரியராக உள்ள பிரசாந்த்,52, என்பவர் சிறுமியுடன் பழகி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
2024ம் ஆண்டு மே 3ம் தேதி சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
புகாரின் பேரில், குன்னுார் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரசாந்தை, 2024ம் ஆண்டு மே, 7ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி, பிரசாந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி எம்.செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அறிவுறுத்தினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.

